Tuesday, August 1, 2017

காஞ்சிபுரம் பட்டு:

காஞ்சிபுரத்தை பற்றி ஒரு பழமொழி உண்டு. 'காஞ்சீபுரம் சென்றால் காலாட்டிக்கொண்டே சாப்பிடலாம்' என்பதாகும். இதன் அர்த்தம் --- காஞ்சீபுரம் சென்றால் கைத்தறி நெசவு நெய்து, பணம் சம்பாதித்து சாப்பிடலாம் என்பதாகும்.
கைத்தறியில் நெசவு நெய்யும் போது, கையையும் காலையும் பயன் படுத்த வேண்டும். அதாவது கையையும் காலையும் ஆட்டிக்கொண்டே என்பதன் அர்த்தமாகும். காஞ்சிபுரம் நெசவுத்தொழிலுக்கும் மிகவும் புகழ் பெற்றது.
பட்டுச் சேலை நெய்யும் முறை:
காஞ்சிபுரத்தில் பட்டு சேலைகள், கோர்த்து வாங்கும் முறை, கோர்த்து வாங்காமல் சாதாரண வாட் முறை என இரண்டு முறைகளில் நெய்யப்படுகிறது.
பட்டுச் சேலைகளில் பயன்படுத்தப்படும் ஜரிகையின் தரம் முக்கியம். 245 கிராம் ஜரிகை ஒரு மார்க் என அழைக்கப்படுகிறது. இதில் 191 கிராம் வெள்ளி (78சதவீதம்), 51.55 கிராம் பட்டு (21சதவீதம்), 2.45 கிராம் தங்கம் (1 சதவீதம்) இருக்கும். தற்போது இந்நிலை இல்லை.
காஞ்சிபுரம் பட்டுக் கூட்டுறவு சங்கங்களில் தங்கம் 0.59 சதவீதம், வெள்ளி 57 சதவீதம், பட்டு 24 சதவீதம், காப்பர் 18.41 சதவீதம் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலான காஞ்சிபுரம் பட்டுச் சேலைகளில் இரு புறமும் ஜரிகை பார்டர் இருக்கும்.
ஜரிகை பார்டர் 2 முதல் 8 அங்குலம் அகலம் கொண்டதாக இருக்கும். சேலை மற்றும் முந்தியை தனியே நெய்து சேர்ப்பர்.இதை பிட்னி என்று பெயர்.
முகூர்த்த பட்டுப்புடவை தயாரிக்க 350 கிராமிலிருந்து 450 கிராம் வரை ஜரிகை, 500 கிராம் பட்டு நூல் தேவை. மூலப்பொருட்கள் விலை உயர்வால் முகூர்த்த பட்டுப்புடவை விலை குறைந்தபட்சம் 35 ஆயிரம் ரூபாய் என விற்கப்படுகிறது.
பட்டு வரலாறு:
தமிழர்கள் பண்டைக் காலம் முதற்கொண்டு பட்டு, கம்பளி ஆடைகளை அணிந்தும் சரிகைகள் இணைந்த ஆடைகளைப் புனைந்தும் வந்துள்ளனர்.
ஆடை நெசவுக்கலை 5000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என்பதைச் சிந்து சமவெளி நாகரிகச் சின்னங்களில் காணப்படும்ஆடைகள் உணர்த்துகின்றன.
வனப்பும் மென்மையும் மிகுந்த ஆடைகள் தமிழகத்தில் நெய்யப்பட்டு பயன்பாட்டில் இருந்ததுடன், அவை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதிசெய்யப்பட்டன.
ஆதிச்ச நல்லூரில் புதைக்கப்பட்டவர்கள் தாமிரபரணி ஆற்றங்கரையில் நெல், பருத்திஆகியவற்றை விவசாயம் செய்தது மட்டுமல்ல நெசவுத் தொழிலும் செய்து வந்தனர் என்று அறியமுடிகிறது.
கி .பி . 985-ல் தமிழகத்தில் இராஜராஜ சோழன்காலத்தில் பட்டு நெசவு செழிப்புற்று வளர்ந்தது . தஞ்சைப் பெரியகோவிலின் கோபுரத்தின் உட்புறத்தில் தீட்டப்பட்டுள்ள ஓவியத்தில்மன்னர் இராஜராஜன் தன் மனைவியருடன் பட்டாடையில், நடராஜரை வழிபடுவதான காட்சி இன்றளவும் காணப்படுவதாகக் கூறப்படுகிறது.
உறையூரில் முன்காலத்தில் நெசவுத் தொழிலுக்குச் சாயமிடும் தொட்டி காணப்பட்டதாகவும். உறையூரில் நெசவு செய்யப்பட சேலைகள் ஒரு தேங்காய் மூடியில் அடைக்கக் கூடிய அளவுக்கு மெல்லியதாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. காஞ்சிபுரம் பட்டு வரலாறு
காஞ்சிபுரம் பட்டு பராமரிப்பு:
பட்டு சேலையை பராமரிப்பது ஒரு தனி ஸ்டைல். முறையாக பராமரித்து வந்தால் பல ஆண்டுகள் நன்றாக இருக்கும்.
1. விஷேசங்களுக்கு சென்று வந்தவுடன் பட்டு புடவையை களைந்து உடனே மடித்து வைக்க கூடாது.நிழலில் காற்றாட 2 அல்லது 3 மணி நேரம் உலரவிட்டு பின்பு அதனை கைகளால் அழுத்தி தேய்த்து மடித்து எடுத்து வைக்கவேண்டும்.
2. சாதாரண தண்ணீரால் மட்டும் அலசினால் போதுமானது. எக்காணரத்தை கொண்டும் பட்டுப்புடவையை சூரியஒளி படும்படி வைக்க கூடாது.
3.பட்டு புடவையின் மீது ஏதேனும் கறை பட்டால் உடனே தண்ணீர் விட்டு அலச வேண்டும்.
4.எண்ணெய் போன்ற கடினமான கறைகளாக இருந்தால் அந்த இடத்தில் விபூதியை போட்டு 5 முதல் 10 நிமிடங்கள் வரை வைத்து பின்பு தண்ணீர் விட்டு அலசவேண்டும்.
5.அடிக்கடி அயர்ன் செய்வதை தவிர்க்க வேண்டும், அயர்ன் செய்யும் பொழுதும் ஜரிகையை திருப்பிப்போட்டு அதன் மேல் லேசான துணி விரித்து அதன் பின்பு அயர்ன் செய்ய வேண்டும். நேரடியாக அயர்ன் செய்யக்கூடாது.
6.பட்டுப்புடவைகளை அட்டை பெட்டிகளிலோ, பிளாஸ்டிக் கவர்களிலோ வைப்பதை காட்டிலும் துணிப்பைகளில் வைத்தல் அதன் தன்மையை பாதுகாக்கும்.
7.வருடக்கணக்கில் பட்டுபுடவையை தண்ணீரில் நனைக்காமல் வைக்க கூடாது. பயன்படுத்தாமல் இருந்தாலும் 3 மாதத்திற்கு ஒரு முறையாவது தண்ணீரில் அலசி நிழலில் உலரவிட வேண்டும்.
8.பட்டுப்புடவையை தாராளமாகத் துவைக்கலாம். புடவை ஒரு கலரிலும், பார்டர் ஒரு கலரிலும் இருந்தால், முந்தானையையும், பார்டரையும் ஒரு கயிற்றால் கட்டி, தண்ணீரில் படாமல், உடல் பகுதியை மட்டும் பூந்திக்கொட்டை ஊற வைத்த தண்ணீரில் நனைத்துத் துவைக்கலாம்.
பிறகு அதைக் காய வைத்து, அடுத்து பார்டர், முந்தானைப் பகுதிகளை வேறு தண்ணீரில் தனியே துவைத்து உலர்த்த வேண்டும்.
9.பட்டைத் துவைக்காமலோ, பாலீஷ் போடாமலோ அப்படியே உடுத்தினால், வியர்வை பட்டு, அதிலுள்ள உப்பு, ஜரிகைப் பகுதியை அரித்து விடும்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.